''மஹிந்தவுக்கு 5 கோடி ரூபா, கோட்டாவுக்கு 1 கோடி ரூபா..." அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்



முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கடந்த வருடத்தில் மாத்திரம் கிட்டதட்ட 10 கோடி ரூபா பணம்  செலவழிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
 

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள்  சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர்,

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவும் இந்த சட்டத்தின் கீழ் சிறப்புரிமைகளைப் பெற்றுள்ளார்.

அவற்றுக்காக பாரியளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. அவருக்கு இந்த சட்டத்தின் கீழ் கடந்த வருடத்திலும் பாரிய நிதி வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு 26 லட்சத்து 85ஆயிரத்து 660ரூபாவும்
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஒரு கோடியே 16 இலட்சத்து 66 ஆயிரத்து 348 ரூபாவும் மஹிந்த ராஜபக்சவுக்கு 5 கோடியே 46 லட்சத்து 52 ஆயிரத்து 990 ரூபாவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒருகோடியே 50 லட்சத்து 72 ஆயிரத்து 450 ரூபாவும்
கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒரு கோடியே 2 லட்சத்து 22 ஆயிரத்து 88 ரூபாவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 34 இலட்சத்து 92 ஆயிரத்து 39 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் 9 கோடியே 85 லட்சத்து 88 ஆயிரத்து 39 ரூபா இவ்வாறு செலவிடப்பட்டுள்ளது
 
அதிகாரங்களில் உள்ள சிலரும் தமது சிறப்புரிமைகளைப் பெற்று வாழ்கின்றனர். அந்த அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது அரசியல் கலாசாரத்தின் மாற்றம்என்பதே தவிர பழிவாங்குதல் அல்ல என்றார்.